1939 ஆம் ஆண்டு. கலைஞருக்கு 15 வயது. 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி வந்தார்.
ஏற்கனவே முந்தைய ஆண்டிலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியதால் பிரபலம் அவர்.
கலைஞரை தேடி ஒரு கதர் சட்டைக்காரர் வந்தார். மெலிந்த தேகத்தோடு இருந்த கலைஞரை பாரத்தவருக்கு ஆச்சரியம்.
‘மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்து குரல் எழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் என ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர்ப் பள்ளியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.‘ என்று அந்த கதர் சட்டைக்காரர் கலைஞரிடம் கேட்டுக் கொண்டார்.ஏற்கனவே இந்தி எதிர்ப்பு அரசியலில் சூடாய் இருந்த கலைஞருக்கு, சுதந்திரம் சமாதானம் சமத்துவம் என்ற வார்த்தைகள் வேகத்தைக் கூட்டின, உணர்ச்சியை ஏற்றின.
சம்மேளனத்தின் அமைப்பாளர் ஆக ஒப்புக் கொண்டார். இருநூறு உறுப்பினர்களை இணைத்தார். காங்கிரஸ் சார்பானதென என எண்ணி காங்கிரஸ் மாணவர்களும் இணைந்தனர். பொது மாணவர்களும் இணைந்தனர். ஆனால் சம்மேளனத்தின் போக்கு பிடிபடவில்லை கலைஞருக்கு.
கதர் சட்டைக்காரர் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கலைஞரை செயலாளர் ஆக்கினார். இதுவே நீடித்தால் எங்கு போய் நிற்போம் காங்கிரஸிலா, கம்யூனிஸ்ட்டிலா என்ற சந்தேகம் கலைஞருக்கு தோன்றியது. அந்த நேரத்தில் தான் ‘தமிழ் வாழ்க, இந்தி வளர்க‘ என்பதை சம்மேளனத்தின் கோஷமாக வைக்கலாம் என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாகி.அவ்வளவு தான். கலைஞர் முடிவெடுத்தார். சம்மேளனம் கலைக்கப்பட்டது. ‘தமிழ் மாணவர் மன்றம்‘ தோற்றுவித்தார். 15 வயதிலேயே பயணிக்க வேண்டிய பாதையை தெளிவாக முடிவு செய்தார். கொள்கை தெளிவு.
1959 ஆம் ஆண்டு தி.மு.க சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத் தது. அதுவரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க போட்டியிட்டிருக்கவில்லை. கலைஞர் தான் வேட்பாளர்கள் தேர்வு குழுவின் தலைவர். மொத்தமுள்ள 100 இடங்களில் 90 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கலைஞர் திட்டமிட்டார்.
காங்கிரஸ் 100 இடங்களிலும் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட் 17 வேட்பாளர்களை நிறுத்தியது. ஜனசங்கம் 15 வேட்பாளர்களையும், சோஷலிஸ்ட் கட்சி 18 வேட்பாளர்களையும் நிறுத்தியது.
முதல் தேர்தலிலேயே 90 வேட்பாளர்களை நிறுத்துவது உகந்ததல்ல என்று பேரறிஞர் அண்ணா நினைத்தார். ஆனால் கலைஞர் அதில் உறுதியாக இருந்தார். பேசிப் பார்த்த அண்ணா ஒரு கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வீசி எறிந்து விட்டார் கோபத்தில். ஆனால் அது நடிப்பு. அப்படியாவது கலைஞர் இறங்கி வருவார் என்று எதிர்பார்த்தார் அண்ணா. ஆனால் இரவெல்லாம் பேசி கலைஞர் அனுமதி பெற்றார், 90 வேட்பாளர்களுக்கு தேர்தல் முடிவுகள் வந்தன. தி.மு.க வேட்பாளர்கள் 45 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அண்ணாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. கலைஞருக்கு கணையாழி அணிவித்து பெருமைப்படுத்தினார் அண்ணா.
தன் முடிவில் நம்பிக்கைக் கொண்டு, தலைவரிடமே வாதாடி அனுமதி பெற்று, வெற்றியும் கண்ட தலைமைப் பண்பு. இந்த பண்பு தான் கலைஞரது ஐம்பது ஆண்டு கால தலைமையின் வெற்றி ரகசியம்.
சமூகநீதிக்காக, மொழிக்காக, மாநில சுயாட்சிக்காக என்று கொள்கை வழி போராடுகிற இயக்கத்தின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் பணியாற்றியது நெருப்பாற்றில் நீந்தியதற்கு ஒப்பாகும்.
( சிவசங்கர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் சமஉ)
ஆகஸ்ட், 2018.